வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் அரசாங்கம் இதுவரை சம்பள உயர்வை வழங்கவில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இவ்வாறான சம்பளத் திருத்தம் எதுவும் முன்மொழியப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
அடுத்த தேசிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப சம்பளத்தைத் திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாத்திரம் தீர்வுகளை வழங்க முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.
சில பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சம்பள நிர்ணய சபை போன்ற பொறிமுறைகள் ஊடாகத் தீர்வு காண முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அதேவேளை, தீர்க்கப்படாத தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் முழுமையான உரிமை இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
போராட்டங்களை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அது தொழிலாளர்களுக்குரிய உரிமை என்றும் அதனை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொழிற்சங்கங்களின் முக்கிய பொறுப்பாகும் எனவும், தமது உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளைத் தீர்க்காமல் தொழிற்சங்கங்களால் தமது பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது கடந்தகால தொழிற்சங்க அனுபவங்களை நினைவுகூர்ந்த அமைச்சர், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதன் முக்கியத்துவத்தைத் தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.








