இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11ஆவது மருத்துவ மற்றும் நலன்புரி முகாம் நேற்று (18) மின்னேரியாவில் நடைபெற்றது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், போர் வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வுப் பணிப்பகம் மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவு ஆகியன இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தன.
மின்னேரியாவில் அமைந்துள்ள 7ஆவது பீரங்கிப் படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற இம்முகாம், ஊனமுற்ற, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
குறிப்பாக, பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சுகாதாரத் தேவைகளுக்கு இம்முகாமில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதன்போது பொது மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்புப் பராமரிப்பு, தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவக் காரணங்களால் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இம்முகாமில் கலந்துகொண்டு மருத்துவ மற்றும் நலன்புரிச் சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















