வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போரினால் தமது வாழ்விடங்களை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், குடியிருப்பதற்கென தமக்கான சொந்த வீடுகள் இன்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவ்வாறு இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரம் என தெரிவித்துள்ளார்.
“வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தச் சூழல் காரணமாக, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளன. இன்னமும் அவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்றனர்”
அந்த அனைத்து குடும்பங்களையும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்றுவது தமது அரசாங்கத்தின் இலக்கு என நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
“அந்தஅனைத்தை குடும்பங்களையும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்றுவதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். 27, 28 ஆண்டுகளுக்குள் அந்த 13,000 குடும்பங்களும் மீள்குடியேற்றப்படும். இதற்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4,000 மில்லியன் ரூபாயினால் அதிகரித்து, மொத்தமாக 10,000 மில்லியன் ரூபாய் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்படும்.”
யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சொந்தமாக எந்தவொரு வீடும் இல்லாத குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,850 மில்லியன் ரூபாய் நிதியை 5,000 மில்லியன் ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்திருந்தார்.
அந்த நிதியின் மூலம் இதுவரையில் எத்தனை வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விபரங்கள் இம்முறை வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்படவில்லை.







