2013ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இருவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பு நேற்று (19) மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்தவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்டியாகொட, கலுபே பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில், தனிப்பட்ட தகராறு காரணமாக களுவாஹந்தி தீபால் வீரரத்ன என்பவர் தடியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீண்டகால வழக்கு விசாரணைகளின் நிறைவிலேயே இரு பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹிக்கடுவ, கலுபே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய அஜித் என்கிற ‘பொட்ட கிரா’ மற்றும் கொரட்டகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய லத்து அமித் ஆகியோருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் அரச தரப்பு சார்பில் அரச சட்டத்தரணி செனுரி குணதிலக்க ஆஜராகியிருந்தார்.
அதேவேளை, அன்றைய காலப்பகுதியில் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிசாந்தவினால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







