ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (19) மாத்தளை, ஹித்கொல்ல பிரதேசத்தில் 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாத்தளை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர் மாத்தளை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் எனவும், கண்டி, கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







