இலங்கையில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் தொடர்பில் வர்த்தக விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக புறக்கோட்டை இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாமல் விநியோகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலவும் எல் நினோ வானிலைத் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக சில பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, இந்தியாவின் காலநிலை மாற்றங்களால் மிளகாயின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, ஏனைய அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மிளகாயின் ஈரப்பத அளவை அடிப்படையாகக் கொண்டே கொள்கலன்களைச் சந்தைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எல் நினோ காலநிலைத் தாக்கத்தினால் விலை அதிகரித்துள்ள சில பொருட்களை மாற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.







