அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், நாடெங்கிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் முன்பாக இன்று திங்கட்கிழமை (23) மதிய நேர இடைவேளையின் போது பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டம் இன்று மதியநேரம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் லோ. தீபாகரன் தலைமையில் பொதுமக்களின் அன்றாடச் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சுமார் 15 நிமிடங்கள் இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 16-க்கும் மேற்பட்ட அரச தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களுக்கு முன்பாக ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.











“இடைக்கால கொடுப்பனவு 25,000ரூ- வழங்கு”,கல்வி தரத்திற்கேற்ப சம்பள உயர்வு மற்றும் பதவியுயர்வினை வழங்கு”,”அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப சம்பள உயர்வை வழங்கு”,”05 வருடங்களில் பதவியுயர்வு வழங்கு”,”பொருட்களின் விலைவாசியை குறைத்திடு”போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஆரம்பக்கட்டமாக 20,000 ரூபாய் தொடக்கம் 25,000 ரூபாய் வரையான இடைக்காலக் கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். அடிப்படைச் சம்பள அளவுத்திட்டத்தை ஆN-4 நிலையிலிருந்து ஆN-5 ஆக உயர்த்துவதுடன், விசேட பதவி உயர்வின் ஊடாக ஆN-7 சம்பள வகைக்குள் உள்வாங்கும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் பிரயாணக் கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊழியர்களிடையே தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் கேட்பது சலுகைகள் அல்ல, சாதாரண மனிதனாக வாழ்வதற்கான ஜீவனோபாய உரிமை எனவும் தொழிற்சங்கத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னரும் அரசாங்கம் தமது கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளத் தவறினால், எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு பூராகவும் பாரியளவிலான சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







