இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், குறித்த தாக்குதல்களில் அரச பாதுகாப்புப் படையினரின் தொடர்பு குறித்து அரசாங்கம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது.
‘I died many times’: Attacks on humanitarian assistance in Sri Lanka, 20 years on எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசாங்கம் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோருவதுடன், உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் 2006ஆம் ஆண்டு முதல் அதிகரித்ததாகவும், 2009ஆம் ஆண்டின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்தக் காலப்பகுதியில் நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு மனிதாபிமானப் பணியாளர் கொல்லப்பட்டதாகவோ அல்லது வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகவோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மனிதாபிமானப் பணியாளர்களை வெளியேற அனுமதிக்காமல், அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கையில் நான்கு முக்கிய சம்பவங்கள் விசேடமாக ஆராயப்பட்டுள்ளன.
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் பிரான்ஸ் நாட்டின் ‘Action contre la Faim’ (ACF) அமைப்பைச் சேர்ந்த 17 உள்நாட்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம்.
2006 ஜனவரி 29 மற்றும் 30ஆம் திகதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏழு பணியாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை.
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற வாகனத் தொடரணி தடுத்து நிறுத்தப்பட்டு பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானமை.
2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்.
ஐக்கிய நாடுகள் சபையின் நீண்டகால விசாரணைகள் மற்றும் அக்காலத்தில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் இடம்பெற்று பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவை தொடர்பில் இதுவரை எவரும் குற்றவியல் ரீதியாகப் பொறுப்புக்கூறவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பல சந்தர்ப்பங்களில் இடைநிறுத்தப்பட்டமை, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாமை, உத்தியோகபூர்வ மறுப்புகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களும் பொறுப்புக்கூறல் இல்லாத நிலைக்குப் பங்களித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ள உறுதிமொழியையும், 2026 மே மாதத்தில் ஆறு விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டமையையும் ஐ.நா. கவனத்தில் எடுத்துள்ளது.
எனினும், ஆராயப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் அல்லது வழக்குத் தாக்கல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்கான பகிரங்க ஆதாரங்கள் இன்னமும் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் கடந்த காலத்துடன் முடிவடைந்துவிட்ட விடயமல்ல எனவும், அவற்றுக்கான பொறுப்புக்கூறல் இல்லாத நிலை சர்வதேச ரீதியிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அறிக்கைக்காகக் கருத்துத் தெரிவித்த பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், கட்டளை மட்டத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் உட்பட, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன், இவ்வாறான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக விசாரணைகளையும் வழக்குகளையும் முன்னெடுப்பதற்கு ஏனைய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.







