முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட் இருந்தும் பயணியை விமானத்தில் ஏற அனுமதிக்காத சம்பவத்தில், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 25 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குமாறு டெல்லி மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அவசர அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்த வில்லியம் பெர்னாண்டஸ் என்பவரும் அவரது மனைவியும், மும்பையிலிருந்து மங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
எனினும், விமானத்தில் அதிகளவிலான முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்த காரணத்தினால், இருவரையும் விமானத்தில் ஏற்றுவதற்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்களின் பயணம் மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விமான நிலையத்தில் காத்திருந்தபோது வில்லியம் பெர்னாண்டஸ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது கணவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி அவரது மனைவி டெல்லி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சுமார் ஏழு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்போது மனைவிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குவதுடன், விமானப் பயணத்திற்காகச் செலுத்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தையும் முழுமையாகத் திருப்பி வழங்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வழக்குச் செலவுகளுக்காக 30,000 இந்திய ரூபாவையும் வழங்குமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு விமானப் பயணிகளின் உரிமைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.







