பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதித்து எந்தவொரு சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எனினும், பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களிடம் கையடக்கத் தொலைபேசிகளை ஒப்படைக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கீழ்நிலைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர்கள் வரையிலானவர்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான வரித் தொகையைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து செலுத்தவும், மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற கடன் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.







