நியூசிலாந்துக்கு புகலிடம் கோரி சட்டவிரோதமாக மீன்பிடி இழுவை படகில் சென்ற 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் குறித்து அரசாங்கப் பதிவேட்டில் இதுவரை பதிவிடப்படவில்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
இதனை நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட், (Michael Wood ) குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரை நான்கு முதல் 28 நாட்கள் வரை காவலில் வைக்கும் காலத்தைச் சட்டத்தை, மார்ச் 28ஆம் திகதியன்று அறிமுகப்படுத்திய நாளில், அவரது அலுவலகம் நியூசிலாந்து மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலியாவை அடைவதற்கான முயற்சிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதன்போது 2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதியன்று 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவை படகு ஒன்று, இந்தியாவின் முனம்பம் பகுதி அருகே மாலியங்கராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதில் 248 தமிழ் புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர் எனற விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், இந்த படகு குறித்தோ அல்லது அதில் இருந்தவர்கள் குறித்தோ இதுவரை தமது நாடு அறியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த படகு தொடர்பில் விசாரணைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்பவர், குறித்த படகு நியூசிலாந்து நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே நியூசிலாந்து அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.