காசாவில் இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் புலனாய்வு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது ஈரான்.
நேற்று வெள்ளிக்கிழமை இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு தூக்கிலிட்டப்பட்டவர்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய நீதித்துறையுடன் இணைந்த மிசான் செய்தி நிறுவனம், தூக்கிலிடப்பட்டவர்கள் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக “போர் நடத்தியதாக” குற்றம் சாட்டப்பட்டதாகவும், “மொசாட் உளவு அதிகாரிகளால் நேரடியாக வழிநடத்தப்பட்டதாகவும்” கூறியது.
இந்த நால்வருடன் சேர்த்து பல்வேறு குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களுக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனா்.
ஏற்கனவே, இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் ஒருவருக்கு கடந்த 16-ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தங்களது நாடுகளை வேவு பாா்ப்பதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.