நேற்றையதினம் (11.04.2023) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விஷேட கூட்டம் ஒன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ. வாசுதேவன் அவர்களின் தலைமையில் இந்தக் கூட்டமானது ஒழுங்குபடுத்தபட்டது.
அதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20கிலோ கிராம் நிறையுடைய அரிசி பொதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
மியர்மான் அரசாங்கம் இந் நிவாரண உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு மாத்திரம் 650 பொதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன் மேற்படி நிவாரணத்திற்காக சுமார் 1.2 பில்லியன் செலவானதாகவும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகப்படியானோர் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அதிலும் குறிப்பாக Tourist Visa ( சுற்றுலா விசா) மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு தொழில் வாய்ப்பும் கிடைக்காமல், நாடுதிரும்பவும் முடியாமல் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடு செய்வதாயின் சட்டரீதியாகவும் அதே நேரம் தொழில் வாய்ப்பினை உறுதி செய்து செல்லுமாறும் அறிவுறுத்தினார். அத்தோடு அங்கு வந்தோருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காய்வாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.