‘‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு‘‘ யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் நிலைமை தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
‘‘கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடந்த காலங்களில் பின்பற்றிய நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும். இதேவேளை வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து தனிநபர் இடைவெளியை பேண வேண்டும்.
சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாக கழுவி அநாவசியமாக கை குலுக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இயன்ற அளவு கூட்டமாக ஒன்று சேர்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் கருத்திற்கொண்டு அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.மேலும், யாழ்ப்பாணத்தில் நேற்று (15.04.2023) மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.