வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகள் மற்றும் தொல்பொருள் திணைக்களம் எனும் போர்வையின் கீழ் தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்படுவதனையும் எதிர்க்கும் முகமாகவும் கொண்டுவரப்படவிருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராகவும் இன்றையதினம் வடக்கு கிழக்கை தழுவிய ரீதியில் பூரண கதவடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
வனத்திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் காணி அமைச்சு என்பன வடகிழக்கிலுள்ள தமிழர்களின் நிலங்களை பல்வேறு சாட்டுகளை சொல்லி அபகரிக்கின்ற செயற்பாட்டை தொடர்ந்தும் செயற்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் பௌத்த மரபு, பௌத்தத்தை தொடர்புபடுத்தி தொன்மை வாய்ந்த இடங்கள் என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை அமைப்பதும், காணிகளை சுவீகரிப்பதுமான செயற்பாடுகளை மிகத்தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, தென்னைமரவாடி ஆகிய பிரதேசங்களில் 32 பௌத்த விகாரைகளை அமைக்கும் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அண்மையில் Battinaatham ஊடகத்தினுடனான சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுடன் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.