மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னங்குடா பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னங்குடா பிரதான வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியை புனரமைக்க உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாக்குறுதிகளைப் பெற்று மக்களை ஏமாற்றாதே, கன்னங்குடா மக்கள் மக்களில்லையா, ஏமாற்றாதே ஏமாற்றாதே, மக்களை ஏமாற்றாதே உட்பட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1976 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட வீதியானது, இதுவரையில் புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கன்னங்குடா பிரதான வீதியை மண்டபத்தடி, கரையாக்கன்தீவு, கன்னங்குடா உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை பயன்படுத்திவரும் நிலையில் இன்னும் குறித்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் பிரதேசங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் கிழக்கில் புகழ் பூத்த கண்ணகியம்மன் ஆலயம் மற்றும் வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதான பாடசாலையாக காணப்படும் கன்னங்குடா மகா வித்தியாலயம் என்பன காணப்படும் நிலையில் மாணவர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கன்னங்குடா பிரதான வீதியில் உள்ள பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுடன் எந்தவேளையிலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் கீழ் பகுதியானது விழுந்து கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறவரும் அரசியல்வாதிகள் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும் பின்னர் அதனை மறந்து செயற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை புனரமைப்பதற்கு பணம் இல்லையென்று வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவிக்கும் நிலையில் வேறு பகுதிகளில் வீதி புனரமைப்புகள் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு வீதியை புனரமைப்பதற்கு எவ்வாறு நிதி வருகின்றது எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
மிகவும் மோசமான நிலையில் குன்றும்குழியுமாக இருந்த வீதியில் கிராம மக்களின் பங்களிப்புடன் குழிகளை மண் இட்டு நிரப்பியுள்ள நிலையில் போக்குவரத்து செய்யும்போது புழுதிகளினால் வீதியில் செல்வோர் பாதிக்கப்படுவதுடன் மழை காலத்தில் கடும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறித்த பிரதேசததில் உள்ள 75வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இன்றைய இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அளித்துள்ள போதிலும் அவரும் இந்த வீதி தொடர்பில் பாராமுகமாகவே செயற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.