மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள, திருகோணமலை வீதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தொலைக்காட்சி ஒன்றை திருடிச் சென்ற திருடர்களுக்கு வேவு பார்த்து கொடுத்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பிரதேசத்சை சேர்ந்த 23 ,24 வயதுடைய இரு இளைஞர்களை திங்கட்கிழமை (05.06.2023) இரவு கைது செய்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் குறித்த பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த எச்.டி.தொலைக்காட்சி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
இதற்கமைய திருடப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை சோதனையிட்டபோது அங்கு அந்த வீடு உடைத்து திருடுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் டியோ ரக மோட்டர் சைக்கிள் மற்றும் பல்சர் ரக மோட்டர்சைக்கிளில் அந்த பகுதிக்கு வேறு வேறு ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்து வேவு பார்துச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு இளைஞர்கள் சென்று வீட்டை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து வேவு பார்த்து வந்தவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பெற்று விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 23, மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை அந்த பகுதியில் வைத்து சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நேற்று(06.06.20230 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.