ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மணல் அகழ்வுக்காக இதுவரை 1300 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சுமார் 1270 மணல் அனுமதிப் பத்திரங்களை நீக்கி தற்போது 30 அனுமதிப் பத்திரங்கள் மாத்திரமேவழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவையும் நீக்கப்படும் என வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தருகே திங்கட்கிழமை (05)
இடம்பெற்ற உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு
அவர் உரையாற்றினார். இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைமற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில், கிராம பொது மக்களால் குளத்தருகே கொட்டப்பட்ட பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள்
அகற்றப்பட்டதோடு மர நடுகையும் இடம்பெற்றது.
மேலும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஏறாவூர்
தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு நாடகமும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் கே. பவாகரன், ஏறாவூர்ப்பற்று
பிரதேச சபைச் செயலாளர் வி. பற்குணம், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட
முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார், பிரதேச செயலக சுற்றுச் சூழல் அலுவலர் எம்.ஐ. ஐயூப் உட்ப்பட பலர் கலந்து கொண்டனர்.