இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற தீர்மானத்தை பிரித்தானியா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவதற்கு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். பிரித்தானியா பாராளுமன்ற மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு மாநாட்டிலேயே இந்த உறுதி மொழியை அவர்கள் வழங்கினர். மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படு கொலை என்பதை இங்கிலாந்துமுறையாக அங்கீகரிக்க வேண்டும்.
தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘இலங்கையின் வடக்கு – கிழக்கில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பு’ எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், ஜோன் மக்டொனால்ட்ஸ் எம். பி. , வீரேந்திர சர்மா எம். பி., சாம் ரேறி எம்.பி., லிப். டெமோக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட். டேவி எம். பி., பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறை இராஜாங்க அமைச்சர் திருமதி சாரா ஜோன்ஸ், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் கரேத் தோமஸ் ஆகியோரே இந்த உறுதிமொழியை அளித்தனர். அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயல்பாட்டாளரன வி. எஸ். எஸ். தனஞ்சயன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையிலிருந்து பங்கேற்ற பிரதி நிதிகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு, போர் முடிந்து 14 ஆண்டுகள் கடக்கும் போதும் அதிகளவு படை பிரசன்னம் குறித்து எடுத்துக்கூறப்பட்டிருந்தது.