கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு படகம பிரதேசத்தில் கணவனின் உறவினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா – எல படகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண் கடந்த 9 ஆம் திகதி அன்று தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கணவனின் உறவினர் ஒருவர் உயிரிழந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்ற போது உயிரிழந்த பெண்ணுக்கும் கணவனின் உறவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவனின் உறவினர் இந்த பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளார்.
காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவனின் உறவினர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.