இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயலின் தாக்கத்தால் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புயல் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்ததால், விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா மற்றும் கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக விசாகப்பட்டினம் கடற்பகுதியில் சுமார் 20 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே யானம் அருகே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 முதல் 135 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








