மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள பிரித்தானியா, அப்பகுதிக்குப் பயணம் செய்யும் தனது நாட்டு மக்களுக்கு புதிய பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் ஒக்டோபர் 27ஆம் திகதி வெளியிட்ட அறிவுறுத்தலில், திடீர் மோதல்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளதாகவும், இதனால் விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படுதல், வான்வெளிகள் மூடப்படுதல் மற்றும் பயணங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் முக்கிய விமான நிலையங்கள் ஊடாகப் பயணிக்கும் பயணிகளும் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணத்திற்கு முன்னர் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விமானச் சேவைகளின் நிலைமையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இடங்கள் இலக்குகளாக மாறக்கூடும் எனவும், இராணுவ மற்றும் பாதுகாப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யேமனின் ஹூதி இயக்கத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் அவசரமற்ற பணிகளில் ஈடுபடும் அமெரிக்க அரசாங்க ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேறுமாறு அமெரிக்கா ஒக்டோபர் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
மத்திய கிழக்கின் அனைத்து வான்வெளிகளும் தற்போது மூடப்படவில்லை என்றாலும், நிலைமை மோசமடைந்தால் விமான நிலையங்களும் வான்வெளிகளும் திடீரென மூடப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே வளைகுடா விமான நிலையங்கள் ஊடாகப் பயணிக்கும் சர்வதேசப் பயணிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.







