இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணப்பிள்ளை சேயோனின் தேர்தல் பரப்புரை பணிமனையும்,தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்று (31) மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்றது.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணப்பிள்ளை சேயோன் தமது தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளல் மற்றும் மக்கள் சந்திப்பு பணிகளுக்காக இவ் பணிமனை அவரால் திறந்து வைக்கப்பட்டது.
வேட்பாளர் தேர்தல் பணிமனையை திறந்து வைக்க முன்னர் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமியை தரிசித்து,ஆலய பிரதம குருவிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர்,மலர்மாலை அணிவித்து பிரதேச மக்களினால் வரவேற்கப்பட்டு ,பிரதேசத்தின் தமிழ் அரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரினால் மங்கள விளக்கேற்றப்பட்டதன் பின்னர் தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் அங்கு நிகழ்வில் கலந்து கொண்ட மக்களிடம் உரையாற்றுகையில், தமிழ் அரசு கட்சி கூட்டமைப்பை சிதைத்ததாக கூறுகின்றார்கள். நாங்கள் சிதைக்கவில்லை.இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.அவர்கள் வரவில்லை.எமது வீட்டை சிதைக்க வேண்டும் என்று வெளிரீதியான இராஜதந்திர முயற்சி ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
பிராந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழர்களை ஒன்றாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை தெளிவாகவுள்ளனர்.அதில் சிக்கிக் கொண்டேமேயானால் எங்களது இனம் சின்னாபின்னமாகிவிடும்.எனவே நாம் நியாயமாக சிந்தித்து எமது மக்களுடைய காவலராக இருக்கவேண்டும் என்பதற்காக தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டி போடுகின்றோம் என்றார்.