இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2024 டிசம்பர் மாதம் வரையான நிலவரப்படி, மோட்டார் வாகன ஆணையாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 54,513 ஆகும்.

பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், இது சுமார் 49 இலட்சத்து 22,000 ஆகும்.
இரண்டாவது அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனம் முச்சக்கர வண்டிகள் ஆகும். இது 11 இலட்சத்து 85,000 ஆகும்.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 72 வீதமானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்றும், இதன் விளைவாக, இந்த வாகனங்களே அதிக விபத்துக்களை சந்தித்து வருவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட மேலும் சுட்டிக்காட்டினார்.
மொத்தமாக, 2023 ஆம் ஆண்டில் 2,231 அபாயகரமான வீதி விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 2,341 உயிரிழப்புகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், 2024 ம் ஆண்டில் நிகழ்ந்த 2,403 விபத்துகளில், 2,521 பேர் மரணித்துள்ளனர்.