மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச கேபியை வீட்டுக்கு வரவழைத்தே கலந்துரையாடினார். எனவே, அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்பு கூறவேண்டும் எனவும் பொன்சேகா கூறினார்.
“கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை மலேசிய பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதற்கமைய நால்வரடங்கிய சிஐடி குழு அங்கு சென்றது. அக்குழுவுடன் மலேசியாவில் இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே , கைது செய்யப்பட்டவர் கேபி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். “எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணிநேரத்துக்குள் கேபியை வீட்டுக்கு அழைத்தார். தனியாக பேச்சு நடத்தினார். அப்போது கேபிவசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்கு பின்னர் கேபி விடுவிக்கப்பட்டார். அப்போது நான் இராணுவத்தில் இருக்கவில்லை.
கேபி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது, அவை அரசுடமையாக்கப்படவில்லை. கே.பியுடன் ராஜபக்சக்கள்தான் கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேசமயம் மலேசியாவிலிருந்து கேபி அழைத்து வரப்பட்ட பின்பு கோட்டாபய ராஜபக்ச கீழ்கண்டவாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
“யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா எனவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனவும் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று பதிலளிக்கையில்,
“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என நான் குறிப்பிடப்போவது இல்லை. எனினும் “கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை அவர் புத்திசாலி. மலேசியாவில் இருந்து அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அதுவே தமது கடைசித் தருணம் என்று அவர் நினைத்திருந்தார். எனினும் தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்” என்றார்.









