திருகோணமலை – இலங்கை தேசிய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் உருவாக்கல் பயிற்சியும், அருட்தந்தை போல் சற்குண நாயகம் தலைமையில், மறைக்கோட்ட ஆன்மீக உதவியாளர்கள் அருட்தந்தை அனஸ்டன் மொராயர்ஸ், அருட்தந்தை அம்ப்ரோஸ், அருட்தந்தை நோட்டன் ஜான்சன் ஆகியோரின் ஆசியுடனும் பங்கு பெற்றளுடனும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்டங்களின் அனைத்து கிறிஸ்தவ வாழ்வு சமூக உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் தன்னாமுனை புனித ஜீசஸ் மண்டபத்தில் அக்டோபர் 5 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி, அக்டோபர் 6 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்றது.



புனித இன்னாசியாரின் ஆன்மீக அடிப்படையில் உருவாக்கப்பட்ட “கிறிஸ்தவ வாழ்வு சமூகம்” என்றால் என்ன, அதன் நான்கு பண்புகள், கட்டமைப்பு, மற்றும் அப்போஸ்தலிக்க பணி ஆகியவை குறித்த தெளிவான பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டன. உருவாக்கல் பயிற்சி ஊடாக உறுப்பினர்கள் கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக நோக்கங்களையும் செயற்பாடுகளையும் ஆழமாக புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
இவ்வொன்று கூடலின் நிறைவில் புதிய இலங்கை தேசிய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. தெரிவான புதிய நிர்வாக உறுப்பினர்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு சமூகத்தின் நிர்வாகப் பொறுப்புகளை வகிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








