கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து பொலிஸ் சீருடை மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர், பணி நீக்கம் செய்வதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது, பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் ஒருவரின் தொலைபேசி இலக்கமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பல குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.








