சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாக கூறப்படும் சவூதி அரேபிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரியாத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-266 விமானம், நேற்று (26) காலை 6:32 அளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மலேசியாவுக்குச் செல்லவிருந்த குறித்த பயணி, விமானம் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த முக்கிய கட்டத்தில், ஆசனப் பட்டியை அணியாமல் கழிப்பறைக்குச் செல்ல முயன்றுள்ளார்.

அதன்போது அவரை தடுத்து நிறுத்திய இரண்டு விமானப் பணிப்பெண்களை குறித்த பயணி தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விமானப் பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, விமான நிலையத்தில் உள்ள காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதன் பின்னர், 28 வயதுடைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் இலங்கைக்கு உட்பட்ட வான்பரப்பில் நடந்ததால், சந்தேக நபர் இன்று (27) முதலாம் இலக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையும் சுற்றுலா காவல்துறையும் இணைந்து இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.








