நாட்டில் ஒருபோதும் மீண்டும் இனவாதம் தலைத்தூக்குவதற்கு இடமளிப்பதில்லை என்பதை உறுதியான கொள்கையாக கொண்டுள்ளதை மீள வலியுறுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை சம்பவம் தற்போது இனவாத ரீதியாக திரிபுபடுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் இனவாதம் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்றன.
அத்துடன் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து அரசாங்கங்கள் ஊழல் மோசடி, ஜனநாயக விரோதம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் வீழத்தப்பட்டுள்ளன.

எனினும், தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான எவ்வித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாதமையால் இனவாதத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில்,காவல்துறையினர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூகத்தை திசைப்படுத்தும் இந்த விடயம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது .
எனினும், திருகோணமலை விவகாரம் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோன்று, காவல்நிலைய புத்தகத்தில் இரவு 11.40க்கு பாதுகாப்பு கருதியே இந்த புத்தர் சிலையை அகற்றியதாக கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் புத்தர் சிலை அகற்றப்பட்டமையால் மீண்டும் அதனை அதே இடத்தில் வைத்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இடத்துக்கு 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் இருந்தாலும் அன்று முதல் இந்த இடத்தில் விஹாரை ஒன்று செயற்படவில்லை என்றும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
மாறாக, இந்த இடத்தில் சிற்றுண்டிசாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டவிரோத கட்டடம் என்பதால் அதற்கு எதிராக வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த இடத்திலுள்ள சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே கடந்த 16 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு அமைய புதிய கட்டடம் அமைக்கவோ பழைய கட்டடத்தை அகற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் தாம் இடமளிக்க போவதில்லை என்றும் தான் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் பௌத்த மக்களும் ஏனைய இன மக்களுக்கும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் எவரேனும் மீண்டும் பழைய இனவாத நாடகத்தை கொண்டுவருவதற்கு முயற்சிப்பார்களாயின், அது கடந்த காலங்களில் மாத்திரமே சாத்தியப்படக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, அந்த நிலைமை நிகழ்காலத்திலும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறானவர்கள், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இனவாதத்தின் மீது எழுத்தப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.








