பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்தார்.
அதற்கமைய, இன்று (28) முதல் அமுலாகும் வகையில் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்று வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர அவர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64 (5) ஆம் பிரிவுக்கு அமைய இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக 2024 டிசம்பர் 17 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ததுடன், முதன்முறையாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.








