இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC), கான்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (Continental Insurance Lanka Limited) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கைது செய்யப்பட்டுள்ளார்.
மைலனாரச்சிலாகே டொன் வென்சஸ்லஸ் ஜெரால்ட் லாசரஸ் குணதாச என்ற குறித்த சந்தேகநபர், இலஞ்சக் குற்றச்சாட்டு ஒன்றுக்கு உடந்தையாக இருந்தார் மற்றும் அதற்குத் துணை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் (Government Analyst’s Department) முன்னாள் அதிகாரி ஒருவருக்கு ரூபா 6,415,050 பணத்தை இலஞ்சமாக வழங்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இலஞ்சம் வழங்கப்பட்டதன் மூலம் கான்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அநியாயமான நிதிப் பயனைப் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதே வழக்குத் தொடர்பில் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட உதவி அதிகாரி டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமன்ன மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு முன்னாள் உயர் அதிகாரியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி, கொழும்புப் பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.








