மட்டக்களப்பு மாவட்டத்திலே மிக மோசமான சர்வாதிகார ஆட்சி நடைபெறும் இடமாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை காணப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களை புறம்தள்ளி குறிப்பிட்ட சில உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட சில வட்டாரங்களுக்கு மாத்திரமே தவிசாளர் பிரதேச சபை வளங்களை பயன்படுத்தி சேவை செய்வதாகவும், பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கோ, பிரதேச மக்களின் கருத்துக்களுக்கோ எந்த வித முக்கியத்துவமும் கொடுக்காது தவிசாளர் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதோடு, தனக்கு வாக்களிக்காத பல பிரதேச சபை உறுப்பினர்களை பழிவாங்கும் விதமாக அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய மறுப்பதோடு பிரதேச சபை வளங்களை வழங்குவதற்கும் மறுப்பு தெரிவித்து வருவதாகவும், பிரதேச சபையில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்வுகளுக்கு கூட அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி சார்பில் தவிசாளராக வந்த ஒருவர், சிங்கள பெரும்பான்மை கட்சிகளை போன்று இனவாதமாக செயற்படுவதோடு, பிரதேச சபை சட்டங்களை மீறி ஒரு குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் சலுகைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.








