வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில், முதலில் 30 வயதுடைய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்ந்த நடவடிக்கையில், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஜெஸ்மின் என அழைக்கப்படும் பெண் சந்தேகநபர் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன், பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மற்றொரு நபர் 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கி வாழைச்சேனை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.








