சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (8) அறிவித்திருந்தார்.
இதில், 35 அமைப்புகள் ஐ.நா.வுடன் தொடர்பில்லாதவை மீதமுள்ள 31 அமைப்புகள் ஐ.நா.,வுடன் இணைந்தவை. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பான முக்கிய அமைப்புகள், ஐ.நா., அமைதி பணிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும்படி, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ட்ரம்ப் அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஐநா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் பல அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் முடிவு குறித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.
நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி, பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு வரவு செலவு திட்டங்களுக்கு பங்களிப்புகள் வழங்குவது, அமெரிக்கா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சட்டப்பூர்வ கடமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அமைப்புகளும் உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்ட தங்கள் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தும்.
நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்காகச் செயல்பட வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. நாங்கள் எங்கள் பணிகளைத் தொடர்ந்து உறுதியுடன் மேற்கொள்வோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








