மட்டக்களப்பு புதுரார் பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை இன்று (16) கைது செய்துள்ளதாக Sri Lanka Police தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த 9ஆம் திகதி இரவு, குறித்த மதுபானசாலைக்கு வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் அங்கு மது அருந்தியுள்ளனர். பின்னர் அருந்திய மதுபானத்திற்கான பணத்தை முகாமையாளர் கேட்டபோது, அவரை அறைக்குள் அழைத்துச் சென்று மதுபான போத்தலால் தலையில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஒருவரை இன்று கைது செய்த பொலிஸார், மற்ற இருவரை தேடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








