கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சி உறுப்பினர்களான பர்ளின், அன்வர், ரிக்னாஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன், சில வியாபாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏறாவூர் பொதுச் சந்தைக்கு விஜயம் செய்த நகர சபைத் தவிசாளர் நளீம் தலைமையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் பொதுச் சந்தையைப் பார்வையிட்டதோடு, ஊடக சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டனர்.
குறித்த ஊடக சந்திப்பில், “வெகு சில நாட்களில் ஏறாவூர் பொதுச் சந்தையை NPP ஆளும் கட்சியைச் சேர்ந்த கௌரவ கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோரின் பங்கேற்புடன் திறக்க உள்ளதை அறிந்த சில நகர சபை உறுப்பினர்கள், வேண்டுமென்றே மக்களை குழப்புவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.








