மண்முனை தென் எருவில் பற்று துறைநீலாவணை பகுதியில் இரவோடு இரவாக வீதிகளில் கழிவு குப்பைகளை சட்டவிரோதமாக கொட்ட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் மற்றும் தென் எருவில் பற்று தவிசாளர் என்.வினோரா மற்றும் உறுப்பினர் இணைந்து மடக்கிப் பிடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பிரதேசத்தில் நீண்ட காலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் கழிவு குப்பைகள் கொட்டப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நேற்று (20) இரவு விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருந்த போது தவிசாளர் தலைமையிலான குழு சந்தேகத்திற்கிடமான வாகனத்தை தடுத்து நிறுத்தி, குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, உரிய அனுமதி இன்றி கழிவு குப்பைகள் கொண்டு வரப்பட்டமை உறுதி செய்யப்பட்டதுடன், உடனடியாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் ரவி வரவழைக்கப்பட்டதுடன், குறித்த நபரையும், குப்பைகளை ஏற்றிவந்த பட்டா ரக வாகனத்தையும் களுவாஞ்சிகுடி பொலிஸிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதேசசபை தவிசாளர், இனி தனது எல்லைக்குட்பட்ட வீதியோரங்களில் இவ்வாறு கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.








