மட்டக்களப்பு குடும்பிமலை பகுதியில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லோஞ்சர் வகை ஆயுதங்கள் 3 நேற்று (6) மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ தினமான நேற்று மாலை அரங்கலாவ விசேட அதிரடிப்படையினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து குடும்பிமலை பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்போது, நிலத்தை தோண்டி பார்த்ததில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லோஞ்சர் வகை ஆயுதங்கள் 3 கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








