யாழ் மருதனாமடம் சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (02.03.2026) மதியம் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் தோன்றியுள்ளன. இந்நிலையில், இன்று மருதனாமடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தனது பழைய மாடல் பல்சர் (Pulsar) இருசக்கர வாகனத்திற்கு முழுமையாக எரிபொருள் நிரப்பியுள்ளார் ஒரு நபர்.
எரிபொருள் நிரப்பி முடித்தவுடன், இயந்திரத்திற்கு அருகிலேயே வாகனத்தை ஸ்டார்ட் செய்ய (Start) முயன்றபோது, எதிர்பாராத விதமாக எஞ்சின் பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பி தீப்பற்றிக் கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் தீ வாகனம் முழுவதும் பரவத் தொடங்கியது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மிக அருகிலேயே தீப்பற்றியதால் பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழக்கூடிய அபாயம் இருந்தது. எனினும், அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை (Fire Extinguishers) பயன்படுத்தி துரிதமாக செயல்பட்டு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பலசர் ரகமோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. எனினும், ஊழியர்களின் துரித நடவடிக்கையினால் எரிபொருள் நிலையத்திற்கோ அல்லது அருகில் நின்ற பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.








