மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையுடன் நிறுத்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நேற்று (05) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை இரவு சுமார் 10.30 மணியளவில் கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால் சாரதி அந்த உத்தரவை மீறி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பொலிஸார் வாகனத்தை துரத்திச் சென்ற நிலையில், அது வாழைச்சேனை நோக்கி தப்பிச் சென்றதுடன் பின்னர் மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸார் வீதி சோதனைத் தடையை அமைத்து வாகனத்தை நிறுத்த முயன்றபோதும், அதனை மீறி வாகனம் மீண்டும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகனத்தை நிறுத்தும் நோக்கில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைத் துப்பாக்கியால் இரண்டு எச்சரிக்கை சூட்டுகளை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் மட்டக்களப்பு நகரின் திருகோணமலை வீதி பகுதியில் பொலிஸார் அமைத்திருந்த சோதனைச்சாவடியில் குறித்த கனரக வாகனம் நிறுத்தப்பட்டு சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துள் பகுதியைச் சேர்ந்த சாரதியிடமிருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயினும், 22 வயதுடைய மீராகேணி பகுதியைச் சேர்ந்த உதவியாளரிடமிருந்து 3420 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சாரதி கரடியனாறு பகுதியில் மாடுகள் திருட்டு மற்றும் வீடு உடைத்து திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவராகவும், இதுவரை தலைமறைவாக இருந்து வந்தவராகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










