அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது.

எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது.
கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை “தோற்றுப்போனவர்” என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








