இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு, மனுக்குலத்தின் மீட்பிற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்த புனித வெள்ளி தினம் இன்று (03) உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களால் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், மட்டக்களப்பு கல்லடி, டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் ஏற்பாட்டில் திறந்தவெளிச் சிலுவைப்பாதை நிகழ்வு இன்று (புனித வெள்ளி) அதிகாலை 5.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அருட்தந்தை யூட் டிலக்சன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில், பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர். தவக்காலத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் இந்தச் சிலுவைப்பாதையில், இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தியானிக்கும் 14 நிலைகளும் பக்திபூர்வமாக நினைவுகூரப்பட்டன.















தங்கள் பாவங்களை உணர்ந்து மனத்துயர் அடைதல், இயேசுவின் துன்பங்களுடன் தங்களை ஒன்றிணைத்து நல்வாழ்வுக்கான அருளை வேண்டுதல் மற்றும் இயேசுவின் உன்னத உயிர்த்தியாகத்தைச் சமூகத்திற்குப் பறைசாற்றுதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த ஆராதனை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ் ஊர்வலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக, கல்லடிப் பிரதேசத்தில் நிலவும் மத நல்லிணக்கம் வெளிப்பட்டது. இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இப்பகுதியில், கிறிஸ்தவ மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சிலுவைப்பாதை ஊர்வலத்தை இந்து மக்களும் மிகுந்த பக்தியுடன் ஆர்வமாகப் பார்வையிட்டதைக் காணமுடிந்தது.
மதங்களைக் கடந்து மனிதநேயமும், இறை பக்தியும் கல்லடி மண்ணில் மேலோங்கி நிற்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்றாக அமைந்ததாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.








