இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நேர்மறை சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அவர், வடக்கு–கிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று (19) நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவலை பகிர்ந்தார். மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து எழுந்த கவலைகள் தொடர்பாக, ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தேர்தலை விரைவுபடுத்தும் விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் வலியுறுத்தினார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக மாகாண சபை அமைப்பும், அதிகாரப் பகிர்வும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.








