இலங்கையின் பல்வேறு தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற மூன்று தனித்தனியான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலையகத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால, பெல்மடுலை நீலகம பிரிவில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக ஏற்பட்ட தகராறின் போது, 11 பாதுகாப்பு அதிகாரிகள் கிராம மக்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, மொக்காவத்தை தோட்டத்தில் நேற்று (06) இரவு தோட்ட முகாமையாளர் ஒருவர் தனது உணவுப் பராமரிப்பாளரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குறித்த முகாமையாளர் இன்று காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், உடுபுஸ்ஸலாவை டெல்டா தோட்டத்தில் தொழிலாளி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் தோட்டத்தின் பிரதி முகாமையாளர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
“இவ்வாறான சம்பவங்களை மூடிமறைக்கும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாது. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்,” என அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், நீண்டகாலமாக நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் இணைந்து கலந்துரையாடல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.








