மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில், வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற சொகுசு கார், எதிர்திசையில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், லொறியில் இருந்த இருவரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர், காயமடைந்தவர்களை உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தின் தாக்கத்தால் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. இருப்பினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டவசமானதாகக் கருதப்படுகிறது.
அதிவேகம் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









