காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷாந்த பத்திரண தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தெனியாய கல்வி வலயத்திலுள்ள நான்கு பாடசாலைகள் கடந்த வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இந்தக் காய்ச்சல் காரணமாக குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 56 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது பாடசாலைகளில் பாதுகாப்பான சுகாதாரச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நீரைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.








