எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கும், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதற்கு பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாணவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தை கொண்டு வந்து சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவர், பயன்படுத்திய ஆயுதத்துடன் எப்பாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








