வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுப்பனவு, பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்படும் குழந்தைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலும், பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன் பங்கேற்புடனும் அண்மையில் பாராளுமன்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சிறு பிள்ளைகளை கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும் சூழ்நிலையில் சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகள் குறித்து முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இந்த புதிய திட்ட விபரங்களை வெளியிட்டுள்ளனர்.








