இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு எல்லைப் பகுதியில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டு கண்டுபிடித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், வெளிநாட்டு நபர் ஒருவரும் மேலும் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது, கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியுடைய ஒளிபரப்பு கருவிகள், செயற்கைக்கோள் தொடர்பு சாதனங்கள் மற்றும் இணைய தொடர்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் அலைவரிசைகளை பயன்படுத்தி, அனுமதியின்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒளிபரப்பு சேவைகள் வழங்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல தகவல்களை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








