சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளியானது.
மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவரிடமும் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்ததையடுத்து, நீதவான் கடுமையாக கேள்வி எழுப்பினார். “வாக்குமூலம் இல்லாமல் விசாரணை எவ்வாறு நடத்தப்படுகிறது?” என அவர் வினவினார்.
மேலும், அவர் வசித்த வீடுகளின் கண்காணிப்பு ஒளிப்பதிவு தகவல்கள் சேமிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மாத்திரைகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாட்சியமளித்த செவிலியர் ஒருவர், சம்பவ இடத்துக்குச் சென்றபோது கபில சந்திரசேன கழுத்தில் துணியுடன் தரையில் கிடந்ததாக தெரிவித்தார். மேலும், வீட்டுப் பணியாளர் ஒருவர், சம்பவம் நடந்த இரவில் அவர் கையில் வெள்ளை நிறக் குடுவையுடன் நின்றிருந்ததை கண்டதாக சாட்சி அளித்தார்.
வழக்கின் மேலதிக விசாரணை இம்மாதம் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








